ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து திமுக சார்பில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தற்போது வரை திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் நிற்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் தேர்வு பற்றி திமுக சார்பில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 9.30 மணி அளவில் நடக்கும் இந்த கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். வடக்கு மாவட்டச்செயலாளர் மாதவரம் சுதர்சனம் மற்றும் பகுதி செயலாளர்கள், வட்டச்செயலாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.