ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் ஓயவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களான மதுசூதனன், மருதுகணேஷ், சுயேட்சைகள் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர். தேர்தல் பரப்புரை நாளை மாலை 5 மணியுடன் ஓய்வுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
பரப்புரை முடிந்ததும் தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூரை சேர்ந்த கட்சிக்காரர்கள் வெளியேற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும். அந்த வகையில் நாளை மாலை பரப்புரை ஓய்ந்ததும் வெளியூரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் தொகுதிக்குப்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்களை தேர்தல் அதிகாரிகள், போலீசார் கண்காணிக்க உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 24 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.