விராட் கோலி, கேன் வில்லியம்சன் போல திறமையாக விளையாடக் கூடியவர் ரிஷப் பன்ட் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய இணையதளத்துக்கு பேசியுள்ள ரிக்கி பாண்டிங், "ரிஷப் பன்ட்டை எந்த இடத்தில் களமிறக்குவோம் என்பதே தெரியாத வகையில் விளையாடுவதே இந்தாண்டின் எங்களின் முக்கிய திட்டம். விராட் கோலி, வில்லியம்சன் போல ரிஷப் பன்ட்டை நாம் பயன்படுத்த முடியும். அப்படி பயன்படுத்துவதன் மூலம் டெல்லி அணி நிறையப் போட்டிகளை வெல்லும்" என்றார்.
மேலும் பேசிய அவர் "ரிஷப் பன்ட் கடந்தாண்டு சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட முழு முடக்கத்தால் அதிக எடை கூடியிருந்தார். அவரால் முழு உடற்தகுதியுடன் விளையாட முடியவில்லை. ஆனால் இந்தாண்டு அவர் சிறப்பான உடற் தகுதியுடன் இருக்கிறார். மேலும் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார். எனவே மிகச் சிறப்பான ஆட்டத்தை அவரிடம் எதிர்பார்க்கலாம்" என்றார் ரிக்கி பாண்டிங்.
தொடர்ந்து பேசிய அவர் "ரிஷப்-ன் விக்கெட் கீப்பிங் மீது எப்போதும் கேள்விகள் முன் வைக்கப்படுகிறது. ஆனால் தன்னுடைய விக்கெட் கீப்பிங் திறனை அவர் தொடர்ந்து முன்னேற்றி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அற்புதமாக விக்கெட் கீப்பிங் பணியை செய்தார். அவர் இன்னும் திறனை மெருகேற்றினால். அடுத்த 10-12 ஆண்டுகளுக்கு இந்தியாவின் விக்கெட் கீப்பராக தொடர்வார்" என்றார் ரிக்கி பாண்டிங்.