டிரெண்டிங்

தமிழகத்தின் உரிமைகள் அடகு வைக்கப்பட்டுவிட்டது: ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தின் உரிமைகள் அடகு வைக்கப்பட்டுவிட்டது: ஸ்டாலின் விமர்சனம்

webteam

நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறும் வகையிலான அவசரச் சட்ட முன் வரைவுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில்,  நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதில், மு.க.ஸ்டாலின் பேசும்போது, சமூக நீதியை கெடுக்க தான், நீட் தேர்வை பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருப்பதாகக் கூறிய அவர், தமிழகத்தின் உரிமைகள் ஒட்டுமொத்தமாக அடகு வைக்கப்பட்டிருப்பதாக விமர்சித்தார். நீட் தேர்வினால் இட ஒதுக்கீட்டு கொள்கை நசுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

நல்லகண்ணு பேசும்போது, ஜனநாயக உரிமை பறிக்கப்படும் நிலையில், கிராமப்புற, நகர்ப்புற மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இல்லை என்று கூறிய அவர், டெல்லியில் இருக்கும் மோடிதான் அதிமுகவினரின் கடவுள் என்று விமர்சித்தார்.