மழை பெய்தால்தான் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் அவரது மகனும் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணாவும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பழமையான சாரங்கபாணி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுவாமி தரிசனம் முடிந்த பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து செய்தியாளர்கள் தேவகவுடாவிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு தேவேகவுடா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
பின்னர் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணாவிடம், காவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலில் பதிலளிக்க மறுத்த ரேவண்ணா, பின்னர் கர்நாடக அணைகளில் தற்போது தண்ணீர் இல்லை என்றும், மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.