டிரெண்டிங்

இந்துக் கோயில்களுக்கு தனி வாரியம்: தமிழக பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

webteam

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்; மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படும்; இந்துக் கோயில்களுக்கு தனி வாரியம் கொண்டு வரப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை தமிழக பாஜக வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை, அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை நிதின் கட்கரி வெளியிட்டார். அதில், “தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்; தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படும்; இந்துக் கோயில்களுக்கு தனி வாரியம் கொண்டு வரப்படும்; டெல்லி போல சென்னையும் மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்படும்.

12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும்; தமிழகம் முழுவதும் தேவையான அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்; விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்; விவசாயிகளை போல மீனவர்களுக்கும் வருடாந்திர உதவித்தொகை ரூ.6,000 வழங்கப்படும்; 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.