இரட்டை இலை சின்னம் இல்லாமலும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
மதுரை ஜடாமுனிகோவில் தெருவில் நடைபெற்ற ஆடி சிறப்பு கைத்தறி கண்காட்சியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பமுடியாத அளவு அனைத்து அம்சங்களையும் சரிசெய்வதற்காக கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறினார். இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும், “பஞ்சாயத்து தேர்தலைப் பொறுத்தவரை எல்லாமும் இரட்டை இலை கிடையாது. சுயேட்சையாகப் போட்டியிடுபவர்களும் இருக்கிறார்கள். ஊராட்சிமன்றத் தலைவருக்கு நிற்பவர் இரட்டை இலை சின்னத்தில் நிற்க முடியாது. வார்டு உறுப்பினர் பதவிக்கு நிற்பவர் இரட்டை இலையில் நிற்க முடியாது. அங்கெல்லாம் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயார். நாங்கள் தேர்தலை அறிவித்துவிட்டோம்; திமுகவினர்தான் தடை ஆணை பெற்றுள்ளனர்” என்று ஓ.எஸ்.மணியன் கூறினார்.