டிரெண்டிங்

தூக்கத்தில் திடீர் விழிப்பு: என்ன காரணம்?

JustinDurai

பலருக்கு தூக்கத்தில் யாரோ அழுத்துவது போன்றோ அல்லது கண் விழித்து எழ நினைக்கையில் கை கால்களை அசைக்க முடியாத உணர்வு தோன்றும். இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன தெரியுமா?

மருத்துவர் அரவிந்தராஜ் தரும் விளக்கம் இதோ..

பொதுவாக நாம் தூங்குகையில் நமது தூக்கம் 5 வித சுழற்சியில் மாறிமாறி ஈடுபடும். Stage 1, Stage 2, Stage 3, Stage 4, REM (Dream Stage).

இதில் ஒரு வித சுழற்சியின் பெயர் தான் REM எனப்படும் RAPID EYE MOVEMENT SLEEP. இந்த சுழற்சியில் தான் நமக்கு கனவுகள் வரும். உங்கள் 8 மணி நேர தூக்கத்தில் இந்த 5 சுழற்சிகளும் மாறி மாறி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இதில் REM சுழற்சி 8 மணி தூக்கத்தில் சுமார் 25% நேரத்தை ஆக்கிரமித்திருக்கும்.

இந்த கனவுகள் ஏற்படும் போது, அதனால் நாம் எழுந்து நடக்கவோ, பேசவோ கூடாது என்பதற்காக மூளையில் இருந்து தசைகளுக்கு சிக்னல் அனுப்பப்படும். அவை தசைகள் அசையாமல் Inactive நிலையில் வைக்க உதவும்.

இந்த REM சுழற்சியை கையாளும் ON-OFF ஸ்விட்ச்சில் பாதிப்பு ஏற்பட்டால் நாம் எழுகையில் தசைகள் செயலற்ற நிலையில் இருப்பதால் இவ்வாறு யாரோ அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.

அதாவது, நீங்கள் தூங்கி எழும் போது, இந்த REM சுழற்சி நிறுத்தப்படும். அப்போது தான் அசையாத நிலையில் இருந்த சதைகள் மீண்டும் அசைய ஆரம்பிக்கும். ஆனால், REM சுழற்சி நிறுத்துவதில் கோளாறு ஏற்பட்டால், நீங்கள் கண் விழிப்பீர்கள்; ஆனால், REM தூக்கம் இன்னும் ஆப் செய்யப்படாமல் இருப்பதால் சதைகள் அசையாத நிலையிலேயே இருக்கும்.

உங்களுக்கு யாரோ அழுத்துவது, மூச்சு விட சிரமம், யாரோ அழைப்பது போன்ற உணர்வுகள் ஏற்படும். ஏன் இந்த பய உணர்வு என்றால், மூளையில் உள்ள Amygdala என்ற பய உணர்வை தூண்டும் பகுதி REM தூக்கத்தின் போது ஆக்டிவ் நிலையில் இருக்கும். உங்களுக்கு REM நிலை ஒழுங்காக தூங்கி எழும்பொழுது ஆப் செய்யப்படாததால் இந்த பய உணர்வு ஏற்படும்.

இதன் பெயர் தான் 'Sleep Paralysis'. இது ஏற்பட நிறைய காரணிகள் உண்டு. மரபணு கோளாறுகள், தூக்கமின்மை, உளவியல் ரீதியான உபாதைகள், மன அழுத்தம், அதீத ஆல்கஹால் பருகுவது என பட்டியல் நீளும்.

ஆகவே, உங்களுக்கு இவ்வாறு எப்போதாவது ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். நல்ல 8 மணி நேர இரவு தூக்க முறை, மன அமைதி போன்றவற்றை மேற்கொண்டால் போதும்.