டிரெண்டிங்

புதுக்கோட்டை : மருத்துவமனையில் வாக்கி டாக்கி மூலம் மருத்துவ ஆலோசனைகள்

webteam

தமிழகத்திலேயே முதன்முறையாக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாக்கி டாக்கி மூலம் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் நான்கு தளங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதால் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையேயான தொடர்பு மிகவும் கடினமாக இருந்து வந்தது.

இதை சரி செய்வதற்காக புதிய முயற்சியாக காவல்துறையின் உதவியுடன் 4 வாக்கி டாக்கிகள் அந்த மருத்துவமனையில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

ஒரு குறிப்பிட்ட அறையில் உள்ள நோயாளிகளிடம் உரையாட வேண்டும் என்றால் அங்கு செவிலியர், வாக்கி டாக்கி வைத்து நோயாளிகளிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த வசதி இருப்பதாக மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.