பாம்பனில் வாக்காளர்களை கவர உதயசூரியன் சின்னத்துடன் கடலில் 6 மணிநேரம் மிதந்து வாக்கு கேட்ட மதிமுக தொண்டர்கள் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.
இதனிடையே கட்சித்தொண்டர்கள் வாக்காளர்களை கவர நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் வெற்றி பெற வேண்டி ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள பாம்பனில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியான மதிமுக தொண்டர்கள் மீனவரணி மாநில துணைச்செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் உதயசூரியன் சின்ன பதாகையை கையில் பிடித்தபடி பாம்பன் கடலில் 6 மணிநேரம் மிதந்து புதுமையான முறையில் பிரச்சாரம் செய்தனர். இது மீனவ மக்களிடையே வரவேற்பை பெற்றது.