டிரெண்டிங்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல்

kaleelrahman

இந்திய எல்லையில் இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்தன.


மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை, டீசல் விலையும் உயர்ந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மீனவர்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 800 விசை படகுகள் உள்ள நிலையில் நேற்று காலை 400க்கும் குறைவான விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டைபெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.


மீனவர்கள் தனுஷ்கோடி ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளனர். இதனால் பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் இரவோடு இரவாக கரை திரும்பினர்.


இந்த நிலையில் இன்று அதிகாலை மீன் பிடித்துவிட்டு கரை திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசிய இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் சுரேஷ் என்பவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரை திரும்பினர்.


இதனால் படகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.