டிரெண்டிங்

பாஜகவுக்கு மாற்றி வாக்களித்த மாயாவதி கட்சி எம்.எல்.ஏ: யோகியை சந்தித்த பின் மாற்றம்

பாஜகவுக்கு மாற்றி வாக்களித்த மாயாவதி கட்சி எம்.எல்.ஏ: யோகியை சந்தித்த பின் மாற்றம்

rajakannan

மாநிலங்களவை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ, பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்துள்ளார்.

மாநிலங்களவையில் காலியாக உள்ள மாநிலங்களை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசம் (10), மகாராஷ்டிரா மற்றும் பீகார் தலா 6, மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப்பிரதேசம் தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகம் தலா 4, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் ஒடிசா தலா 3, ஜார்கண்ட் 2, சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தலா 1 என மொத்தம் 58 எம்.பி.க்கள் இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 33 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 25 இடங்களுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெற்றது.

இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட உள்ள நிலையில் பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றிபெறும் என்பது உறுதியாகிவிட்டது. சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு இடம் உறுதி. கடைசியாக உள்ள ஒரு இடத்திற்கு மட்டும் பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் இடையே கடும் போட்டி நிலவியது. இதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ அனில் சிங், பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்துள்ளார். இருப்பினும் மற்றவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்று தெரியவில்லை என்று அனில் சிங் கூறினார். முன்னதாக நேற்று இரவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அனில் சிங் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ நிதின் அகர்வாலும் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. நிதின் அகர்வாலின் தந்தை நரேஷ் அகர்வால் இம்மாதம் பாஜகவில் இணைந்தார். இதனிடையே, பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்தா தலா ஒரு ஓட்டு செல்லாதது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிம்ராவ் அம்பேத்கர் தோல்வியை தழுவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பீம்ராவுக்கு 32 வாக்குகளே கிடைத்தன. பீம்ராவுக்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியில் மீதமுள்ள வேட்பாளர்கள் வாக்களித்தனர். இருப்பினும் அவர் தோல்வியை தழுவினார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து பாஜகவை தோற்கடித்தது. சமாஜ்வாடிக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சியினர் வாக்களித்தனர். இது பாஜகவுக்கு படுதோல்வியாக அமைந்தது. முதல்வர், துணை முதல்வர் இருந்த தொகுதிகள் பறிபோனது அவமானமாக கருதப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறுவதாக கூறப்பட்ட இடத்தை பாஜக பிடித்துவிட்டது.