டிரெண்டிங்

ஏழு பேர் விடுதலை: ஆளுநர் அதிகாரம் என்ன?

ஏழு பேர் விடுதலை: ஆளுநர் அதிகாரம் என்ன?

webteam

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன? பார்க்கலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி, மாநில சட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநர் தண்டனையை முழுமையாக ரத்து செய்யலாம் அல்லது தண்டனையை குறைக்கலாம். முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநரிடம் முழுமையாக இருக்கிறது.

எனினும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் ஆளுநர் விடுவிப்பது குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு தரப்பில், அமைச்சரவை பரிந்துரை செய்தால் அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்றும், அதனால் ஏழு பேரையும் விடுவிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது எனக் கூறுகின்றனர். இந்த நடைமுறையை பின்பற்றித்தான் நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மறுபுறமோ, இந்த விவகாரத்தில் ஆளுநர் மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும், மாநில அமைச்சரவையின் பரிந்துரையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கூறுகின்றனர். மத்திய அரசோ 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகம் மூலம் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஏழு பேரையும் விடுவிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என கூறப்பட்டிருந்தது. எனவே இந்த விவகாரத்தில் ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது புதிராகவே உள்ளது.