டிரெண்டிங்

“பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறு” - ரஜினிகாந்த் கருத்து

“பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறு” - ரஜினிகாந்த் கருத்து

webteam

பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறாக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

‘ரஜினி மக்கள் மன்ற’த்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் நடிகர் ரஜினிகாந்த் செய்து வருகிறார். 

மக்கள் மன்றத்தை ஆரம்பிக்கும் முன்பு செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்த ரஜினிகாந்த் தற்போது தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ‘சர்கார்’ பட பிரச்னைக்கும் அரசு நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்தார். 

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

கேள்வி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : எந்த 7 பேர் ? அது பற்றி எனக்கு தெரியாது. 

கேள்வி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குறித்து என்ன சொல்கிறீர்கள்? 

பதில் : இதில் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அந்தச் சட்டத்தை உடனே அமுல்படுத்த வேண்டும்.

கேள்வி: பணமதிப்பை அமுல்படுத்தி 2 ஆண்டுகள் ஆவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 

பதில்: அதை அமல்படுத்திய முறை தவறாக இருக்கிறது. அது பற்றி விரிவாகதான் பேச வேண்டும்.

கேள்வி: பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படுகிறது. பாரதிய ஜனதா அந்தளவுக்கு ஆபத்தான கட்சியா? 

பதில் : அப்படி என்று அவர்கள் (எதிர்ப்பவர்கள்) நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது கண்டிப்பாக அப்படி தானே இருக்க முடியும்.