டிரெண்டிங்

விவசாய அணியை உருவாக்க ரஜினி உத்தரவு

Rasus

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விவசாய அணியை உருவாக்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

ரஜினி அரசியலில் குதிப்பார் என நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் பயண அறிவிப்பை அவர் வெளியிட்டார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் கூறினார். இன்னும் கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிவிக்கப்படாத நிலையில், உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். அதன்தொடர்ச்சியாக இதுவரை ரஜினி ரசிகர் மன்றம் என அழைக்கப்பட்டு வந்த ரஜினியின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளும் அண்மையில் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் விவசாய அணியை உருவாக்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். விவசாய அணிக்கான தனி நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் விவசாயிகளுக்கு உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து விரைவில் தீர்வுகாணும் வகையில் பணியாற்றுபர்களாக இருக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதற்காக விவசாய சங்கங்களோடும் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளார். விவசாயம் தவிர கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கும் முக்கியதுவம் கொடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.