காலா திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தி.மு.க வில் மட்டுமே கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளதாகவும், அ.தி.மு.கவில் எப்போதும் இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை என்றும் கூறினார், சின்ன சின்ன சச்சரவுகள் விரைவில் தீர்க்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ காலா திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். எந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து காணாமல் போனது போல மற்ற நடிகர்களும் காணாமல் போவார்கள். தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் கொடிகளை கூட பிடிக்க ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது” என தெரிவித்தார்.
இவரைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், “பல்வேறு மாற்றங்களை தமிழகம் பார்த்து வருகிறது. தழிகத்தில் மக்கள் வியக்கும் அளவிற்கான ஆட்சி நடைபெற்று வருகிறது.” என தெரிவித்தார். தமிழக ஆட்சியில் சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினியின் கருத்து குறித்த கேள்விக்கு, புதியதாக கட்சி தொடங்குபவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என செங்கோட்டையன் பதிலளித்தார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்பதே அரசின் தீர்கமான கொள்கையாக இருப்பதாகவும், இதற்காக தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருவதாகவும் கூறினார். சித்தா, ஆயுர்வேதம், யுனானி படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் ஏதும் வரவில்லை என்றும் செங்கோட்டையன் கூறினார்.