பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை பற்றி எனக்கு தெரியாத அளவிற்கு தான் முட்டாள் அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மக்கள் மன்றத்தை ஆரம்பிக்கும் முன்பு செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்த ரஜினிகாந்த் தற்போது தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ‘சர்கார்’ பட பிரச்னைக்கும் அரசு நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘எந்த 7 பேர் ? அது பற்றி எனக்கு தெரியாது’ என்று ரஜினி பதில் அளித்தார்.
ரஜினியின் கருத்து குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல், 7 பேர் விடுதலை என்று மட்டும் கேட்டதால் கேள்வி புரியாமல் போய்விட்டது என்று சிலர் கூறினர். இதனையடுத்து, பேரறிவாளனிடம் நடிகர் ரஜினி காந்த் பேசியதாக, பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவா தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினி காந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை பற்றி எனக்கு தெரியாத அளவிற்கு தான் முட்டாள் அல்ல. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்; கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் விடுதலை என்று கேட்டிருந்தால் புரிந்திருக்கும். வெறும் 7 பேர் விடுதலை என்று கேட்டதல் எனக்கு புரியவில்லை. பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து” என்றார்
Read Also -> பாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்