திருச்சியில் ரஜினி மக்கள் மகளிர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுடன் பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.
ரஜினி அரசியலில் குதிப்பார் என நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் பயண அறிவிப்பை அவர் வெளியிட்டார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறினார். இன்னும் கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிவிக்கப்படாத நிலையில், உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த். அதன்தொடர்ச்சியாக இதுவரை ரஜினி ரசிகர் மன்றம் என அழைக்கப்பட்டு வந்த ரஜினியின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளும் அண்மையில் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலனியில் ரஜினி மக்கள் மகளிர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. மன்றம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே 120 பெண்கள் அதில் தங்களை இணைத்துக்கொண்டர். தமிழகத்தில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளையும் ரஜினி தீர்ப்பார் என்று ரஜினி மக்கள் மகளிர் மன்றத்தில் இணைந்துள்ள பெண்கள் தெரிவித்தனர். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பி ரஜினி மக்கள் மகளிர் மன்றத்தில் பெண்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரஜினி மக்கள் மன்றத்தில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.