பேரியம் இல்லாமல் பட்டாசு தயாரிக்க வேண்டும் என்றால் எப்படி பட்டாசு வரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக கூறி கடந்த 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பை கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில், பட்டாசு வெடிப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும் எவ்வித தடையும் இல்லை. ஆனால் சரவெடி பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது, பேரியம் நைட்ரேட் மூலப்பொருட்களுடன் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது, பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகள் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் 40 நாட்களாக மூடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிவகாசி, வெம்பக்கோட்டை, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும், அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற நிபந்தனைகளை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டாசு தொழிலாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய அவர், பட்டாசு வழக்கில் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். பட்டாசு ஆலையை திறக்க எது தடையாக இருந்தாலும் அதை தகர்த்து எறிவோம் எனவும் காபி தூள் இல்லாமல் காபி எப்படி வரும் என்பது போல பேரியம் இல்லாமல் பட்டாசு தயாரிக்க வேண்டும் என்றால் எப்படி பட்டாசு வரும் என கேள்வி எழுப்பினார்.
மேலும் நான் இங்கு அமைச்சராக வரவில்லை எனவும் உங்களில் ஒருவனாக வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அனைத்து கட்சியினர், பட்டாசுதொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.