மதுரை விமான நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உள்ளாட்சித் தேர்தல் உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர், ‘உள்ளாட்சியிலும் அதிமுக நல்லாட்சி தரும்’ என்று கூறினார்.
மேலும் அவர், “உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். தமிழக முதல்வர்கூட இதை கூறியுள்ளார். தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்திலேயே நமது தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி அமைப்பினுடைய தலைவர்கள் பதவி ஏற்பார்கள் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். ஆகையால் இதனை நிறுத்துவதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே உறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக நல்லாட்சி வரும்.
நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய சரிவு அடைந்து விட்டோம். திமுக பொய்யான வாக்குறுதிகளை பரப்பி வெற்றியடைந்தது. அது பொய்யான வெற்றி என்பதை மக்களிடத்திலே நாங்கள் சொன்னோம். அது வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்தது. 8000 ஓட்டு வாக்கு வித்தியாசத்தில் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அது ஒன்றும் மிகப்பெரிய வெற்றி அல்ல.
தற்போது நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் மிகப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. 33 ஆயிரத்து 500 ஓட்டுகள் நாங்குநேரியிலும், 46 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் விக்கிரவாண்டியிலும் வெற்றி பெற்றுள்ளோம் என்று சொன்னால் இது அதிமுகவின் மிகப்பெரிய வெற்றி. ஆகையால் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெறும்” என்று கூறினார்.