சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்காவிட்டால் ‘சர்கார்’ படம் மதுரையில் எங்குமே ஓடாது என சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தீபாவளி அன்று வெளியாகியது. பல தடைகளைத் தாண்டி அந்தத் திரைப்படம் திரைக்கு வந்ததை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘சர்கார்’ வெளியான இரண்டே நாளில் ரூபாய் 100 கோடி வசூல் செய்ததையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியை எதிர்க்கும் இளைஞராக நடித்துள்ளார்.
மேலும் கள்ள ஓட்டு என்ற கருத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த சர்காரில் பல சர்ச்கைகுறிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதிமுகவினர் கருதுகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் திரையரங்கம் முன்பு இன்று காலை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேசிய ராஜன் செல்லப்பா, 'சர்கார்' என்கிற திரைப்படம் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவதாக தமிழக மக்கள் கருதுவதாகவும் இந்தத் திரைப்படம் குறுகிய நோக்கத்தோடு ஆளுங்கட்சியை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்கினால் மதுரை மாநகர் முழுவதும் ‘சர்கார்’ திரைப்படத்தை திரையிட அனுமதிப்போம் எனவும் இல்லாவிட்டால் மதுரையில் எங்குமே படம் ஓடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.