டிரெண்டிங்

பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தில் சோதனை நிறைவு.. பல கோடி பறிமுதல்..?

Rasus

நாமக்கல்லில் பி.எஸ்.கே கட்டுமான நிறுவனங்களில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையின் போது பதினான்கரை கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களில் கடந்த 12-ம் தேதி காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி அடுத்த நடுக்கோம்பையில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளர் பெரியசாமி இல்லம் மற்றும் அவரது அலுவலகம், நாமக்கல்லில் உள்ள பெரியசாமியின் உறவினர் செல்வகுமார் அலுவலகம், அவரது வீடு, பெரியசாமியின் உறவினர் சண்முகம் வசிக்கும் வீடு ஆகிய இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல், சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்த வந்த 20-க்கும் அதிகமான அதிகாரிகள், பெரியசாமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 65 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனை இன்று அதிகாலை 2 மணிக்கு நிறைவடைந்தது. இச்சோதனையின் போது பதினான்கரை கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.