அமெரிக்க பயணத்தின்போது மீண்டும் ட்ரம்ப் அரசு அமைய ஆதரவு கேட்டதற்காக பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அமெரிக்க பயணத்தின்போது ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரை குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார் எனப் பேசியதன் மூலம் அந்நாட்டு ஜனநாயகக் கட்சியினரிடம் இந்தியர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பிரச்னையை பிரதமர் ஏற்படுத்தி விட்டதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் தவறான பேச்சை சரிக்கட்ட முயற்சித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுக் கொள்கை குறித்து பிரதமருக்கு சிறிதளவு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது தவறாக சித்தரிக்கப்படுவதாக ஜெய்சங்கர் கூறியிருந்தார். அந்த பதிவை வெளியிட்டு ராகுல் காந்தி இப்போது விமர்சித்துள்ளார்.