காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது ராகுல் காந்தியுடன் அவரது தாய் சோனியா காந்தியும் சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருந்தனர். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவரது இரு பிள்ளைகளும் வேட்பு மனுத்தாக்கலின் போது உடனிருந்தனர். வேட்பு மனுத் தாக்கல் செய்ய செல்லும் முன் சாலையில் வாகனம் மூலம் சென்று இரு மருங்கிலும் திரண்டிருந்த கட்சித் தொண்டர்களின் வாழ்த்துகளை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். அப்போது அவருடன் சகோதரி பிரியங்காவும் உடனிருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி கடந்த 2004ம் ஆண்டிலிருந்து மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த முறை பாரதிய ஜனதா வேட்பாளர் ஸ்மிருதி இரானியை ராகுல் காந்தி ஒரு லட்சத்து 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த முறையும் ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி களமிறங்க உள்ளார். மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார். ராகுல் காந்தி அமேதி தொகுதி தவிர கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.