ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தனது அசையும், அசையா சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு வரும் டிச.21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி அத்தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை முன்மாதிரியாக கொண்டுதான் நான் அரசியலுக்குள் நுழைந்திருக்கிறேன் என்றார். காலையியே இதற்காக காமராஜர் நினைவு இல்லத்திலும், ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திலும் அவர் மரியாதை செய்தார்.
பின்னர் பேசிய விஷால், “நான் அரசியல்வாதியாக தேர்தலில் நிற்கவில்லை. மக்களுடைய பிரதிநிதியாக நிற்கிறேன். ஆர்.கே.நகர் மக்களின் அடிப்படை தேவை என்ன?, அடிப்படை பிரச்னைகள் என்ன? ஏன் இத்தனை நாள் பிரச்னைகள் சரிசெய்யப்படவில்லை? பிரச்னைகள் குறித்து யாரிடம் கேள்வி கேட்பது? இதற்கெல்லாம் விடையாகதான் நான் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன்” என்று கூறினார்.
இந்நிலையில் அவர் இன்று தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில் அவரது சொத்து மதிப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அசையும் சொத்தாக ரூ.1.41 கோடி மதிப்புள்ள கார் உள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கையிருப்பாக ரூ.2.45 லட்சம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.