டிரெண்டிங்

பேரன் வில்லியமிற்கு கைப்பட கடிதம் எழுதிய ராணி எலிசபெத்: பூரித்துப்போன ராயல் ரசிகர்கள்!

JananiGovindhan

பிரிட்டனின் நீண்டகால அரசியாக வாழ்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மறைந்ததை அடுத்து, அவர் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன.

இப்படி இருக்கையில், தனது பேரனும், வேல்ஸ் இளவரசருமான வில்லியமிற்கு ராணி எலிசபெத் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று Royal Household Mail என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு நெட்டிசன்களிடையே வைரலாக்கப்பட்டிருக்கிறது.

அந்த கடிதத்தில், “வில்லியம், ஒவ்வொரு நாளும் இதை திறந்து படிக்கும்போது மகிழ்ச்சி அடைவாய் என நம்புகிறேன். இப்படிக்கு பாட்டி” (William, I hope you enjoy opening this each day, Granny) எனக் குறிப்பிட்டு ஒரு நாட்காட்டியையும் ராணி இரண்டாம் எலிசபெத் அனுப்பியிருக்கிறாராம்.

இது 1997ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமிற்கு ராணி எலிசபெத் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டாலும் எந்த ஆண்டு எழுதப்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இருப்பினும், ராணியின் கைப்பட எழுதப்பட்ட இந்த கடிதம் 1400 பவுண்டிற்கு இந்திய மதிப்பில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 790 ரூபாய்க்கு முன்னாள் இளவரசி டயானாவின் ஊழியர் ஒருவரால் 2016ஆம் ஆண்டு ஏலத்தில் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள், “ராணிக்கும், இளவரசருக்கும் இடையே அழகான உறவு இருந்திருக்கிறது” என்றும், “இந்த கடிதம் இளவசர் வில்லியமிற்கு நெருக்கமான நினைவலையாக இருக்கும்” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.