கொரோனா நம்மைச் சூழ்ந்ததில் இருந்து நம் காதில் அடிக்கடி விழும் வார்த்தைகள் சமூக இடைவெளி, தனி மனித விலகல், தனி மனித இடைவெளி போன்றவையே. முன்பு கூட்டுக்குடும்பமாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு வாழ்ந்தனர். பின்பு அதுவே தனிக்குடும்பமாகப் பிரிந்து பின்பு செல்போன் வாழ்க்கை என மாறிப்போனது. ஆனால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் இந்த காலகட்டம் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்படியிருந்தோம் என்று நம்மை நாமே கேள்விகேட்க வைத்திருக்கிறது. கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் மற்றும் தனிமனித இடைவெளி உருவானது மற்றி விளக்குகிறார், தமிழ்துறை முனைவர் பா. ஜெய்கணேஷ்.
மனிதன் ஆதிகாலத்திலிருந்தே இனக் குழுக்களாக வாழ்ந்து பழகியவன். கூட்டம் என்பது அவனது பலம். வேட்டையாடுதல் தொடங்கி அதிகாரம் கைப்பற்றுதல் வரை கூட்டத்தின் இணைவினால் மட்டுமே அனைத்தையும் அவன் சாத்தியப்படுத்தினான்.
சங்க இலக்கியக் காலங்களில் நிலத்தை அடிப்படையாக வைத்து மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்தார்கள். இந்த இனக்குழுக்கள் தங்களின் நிலப்பரப்பிற்கான வாழ்வியலைத் தங்களின் உழைப்பிற்கேற்ப வடிவமைத்துக் கொண்டனர். பாணர்களும் புலவர்களும் மன்னர்களிடம் பரிசில் பெற கூட்டம் கூட்டமாகச் சென்று ஆடியும் பாடியும் பரிசில் பெற்று வந்தனர்.
கீழடி தொடங்கி இன்று அகழாய்வு நடக்கும் இடங்களிலெல்லாம் மனிதர்கள் ஒரு கூட்டமாக வாழ்ந்த வரலாறே பதிவுசெய்யப்பட்டு வருகிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என உலகின் பல நாடுகளில் புல், பூண்டு முளைப்பதற்கு முன்பே மனிதன் சேர்ந்து வாழ்தல் குறித்த தத்துவங்களைத் தமிழ்ச்சமூகம் முன்மொழிந்திருக்கிறது.
இந்தச் சேர்ந்து வாழ்தலை விரிவாக்கம் செய்து பொது சமூகத்தோடு தன்னைப் பிணைத்துக் கொள்ளுதல் என விழாக்கள், சடங்குகள் ஆகியவற்றை உருவாக்கி மனிதர்கள் சேர்வதற்கான பல்வேறு வழி முறைகளை நெறிப்படுத்தினான். மனிதர்களின் வாழ்வியலில் நடக்கும் இன்ப, துன்ப நிகழ்ச்சிகளைக் கூட்டாகச் சேர்ந்து எல்லோரும் பகிர்ந்து கொண்டனர். வேறு வேறு இனக்குழுக்களாக இருந்த போதிலும் இது மாதிரியான பொதுத்தளங்களில் அவர்கள் இணைந்தும் பிணைந்தும் தங்கள் வாழ்வைச் சமூக வாழ்வியலோடு தொடர்புபடுத்தியும் கொண்டிருந்தனர்.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கூட கூட்டமாக இணைந்த வாழ்வில் எங்கேயும் பெரிதான விலகல்கள் இல்லை. ஐந்திற்கும் மேற்பட்ட பிள்ளைகள் பிறந்த குடும்பங்களே இக்காலங்களில் அதிகம். கல்வி, தொழில் ஆகியவை பெரிதளவு பெருக்கம் இல்லாத இக்காலங்களில் விவசாயம் உள்ளிட்ட கூட்டுத்தொழில் சார்ந்த தொழில்களையே குடும்பம் குடும்பாக இணைந்து மனிதர்கள் மேற்கொண்டனர். மனிதர்கள் மட்டுமல்லாது வளர்ப்புப் பிராணிகளும் இதில் சேர்ந்தே இருக்கும்.
மேலை நாடுகளில் குடும்பம் என்பது கூட்டாக இருந்த போதிலும் பெற்றோர்க்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி என்பது சிறுவயதில் இருந்தே தொடங்கிவிடுகிறது. தன்னிச்சையான வளர்ச்சிக்கும் பொருளாதாரத் தேடலுக்கும் அவர்கள் சிறுவயதிலிருந்தே தயார் செய்யப்படுகிறார்கள். நம் சமூகத்தைப் பொறுத்த அளவில் வளர்ந்த பிள்ளைகள் உட்பட குடும்பமாக சேர்ந்தே உறங்குவதும் பிள்ளையின் வளர்ச்சி வரை பெற்றோரின் பாதுகாப்பில் இருப்பதுமே தொடர்ந்து வந்திருக்கிறது.
இப்படி எல்லா நிலைகளிலும் சேர்ந்திருந்தல், சேர்ந்து வாழ்தல் என்பதை முதன்மைப்படுத்தி வாழ்ந்த தமிழ்ச் சமூகம் முப்பது நாற்பது ஆண்டுகளில் பெரும் மாற்றத்தைச் சந்தித்திருக்கிறது. கல்வியின் வளர்ச்சி, உலகமயமாக்கலின் தொடர்ச்சி என மாறிய வாழ்முறையில் மனிதன் பொதுக்கூட்டத்திலிருந்து மெதுமெதுவாகத் தன்னை விலக்கிக் கொள்ளத் தொடங்கினான். திருமணம், திருவிழாக்கள் என எல்லாவற்றிற்கும் நான்கு நாட்களுக்கு முன்பாகவே சென்று தங்கி கூட்டமாக இருந்து கூட்டமாக உண்டு கூடிசேர்ந்து இருந்த மனித வாழ்வு நேரமின்மை என்பதைக் காரணமாகச் சொல்லி எல்லா விழாக்களுக்கும் தலையை மட்டும் காட்டிவிட்டு வருவதாக மாறிவிட்டது.
தனிமனித சுதந்திரம், வேலை காரணமான இடப்பெயர்வு, பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட காரணம் முதலானவைகளால் கூட்டுக் குடும்ப வாழ்விலிருந்து பிரிந்து மனிதன் தனிமனித வாழ்வை நோக்கி அதிகம் நகரத் தொடங்கினான். இந்த நகர்தலில் அவர்கள் இயந்திரத்தனமாக இயங்கத்தொடங்கினார்கள். இயந்திரங்களோடு இயந்திரமாக மாறிய மனித வாழ்வில் புதிய வகை இயந்திரங்களும் இணைந்தன. தொலைக்காட்சி கூட அருகாமையில் இருக்க வைத்தது. தொலைபேசி கூட தூரம் போகச் செய்யவில்லை. ஆனால் அலைபேசி அனைவரையும் ஒரே வீட்டிற்குள்ளாக தனித்தனியே இடம்பெயரச் செய்தது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பகிரப்பட்ட ஒரு புகைப்படம் ஒரே வீட்டில் இருந்த ஐந்துபேர் தனித்தனியே அலைபேசியைப் பார்த்துக் கொண்டு தனித்தனியே படுத்திருப்பர். ப்ரைவஸி என்ற ஆங்கிலச்சொல் அதிகம் புழங்கத் தொடங்கியது. பிள்ளைகளைக் கண்காணிக்க பெற்றோர்கள் பெரும் பிரயத்தனம் செய்தபோதும் அது அவர்களின் பெரும் போராட்டமாக மாறிப்போனது. வீட்டில் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் பிள்ளைகள் அலைபேசியின் செயலிகளில் சிக்கிக்கொண்டார்கள்.
கிராமங்களும் நகரங்களாக மாறின. நிலாச்சோறு தொலைந்தன. டூரிங்டாக்கீஸ் கதைகள் காணாமல் போயின. பிள்ளைகள் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் தொலைதூரம் சென்றன. எல்லோரும் இருந்தார்கள். ஆனால் யாரும் யாருடனும் இல்லாமல் போனார்கள். கூட்டுக்குடும்பம், கூட்டு வாழ்வு என வாழ்ந்த மனிதர்களின் சிந்தனையிலேயே குறிப்பிட்ட காலமாக ஏற்படத் தொடங்கிவிட்ட தனிக்குடும்பம், தனிப்பட்ட வாழ்வு என்பது அந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாக இன்று நம்மை ஒரு வைரஸ் தொற்றின் பின்புலத்தில் தனித்தனியே இரு என கட்டாயப்படுத்தி இருக்கிறது.
சில காலமாக மனிதன் எதைத் தேடி ஓடிக்கொண்டிருந்தானோ அதையே இந்த வைரஸ் அவனுக்குப் பரிசளித்தது. ’ஒன்றாக இருக்காதே, சமூக விலகலைக் கடைப்பிடி, கை குலுக்காதே, கட்டி அணைக்காதே, தூரம் போ’ என அவனை எல்லாமுமாக மாற்றிவிட்டது. இவையனைத்தையும் தீவிரமாக கடைபிடிக்காவிட்டால் மரணம் என்பது வரை இந்த வாழ்வு அவனைக் கட்டாயப்படுத்தி இருக்கிறது.
காலங்காலமாக சேர்ந்து வாழ்ந்த மனிதன் விலகலை நோக்கி நகரும்போது கட்டாயமான விலகல் அவனைத் தற்போது நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறது. சேர்ந்து வாழ்தலைத் தன் கனவுகளின் பிம்பமாக மனிதன் நினைவலைகளில் தேடிக்கொண்டிருக்கிறான். திருமணம், இறப்பு, விழாக்கள் என எதிலும் தலைமட்டுமே காட்டிய மனிதன் ஏக்கத்தின் பெருமூச்சுகளில் இன்று கிடக்கிறான்.
உறவுகளைத் தேடி அலையும் அவனது கால்கள், யாரிடமாவது கைதந்துவிடமாட்டோமா என எண்ணித் தவிக்கும் அவனது கைகள், நெருங்கிய உறவுகளே நெருக்கடியில் தவிக்கும்போது கட்டித்தழுவி ஆறுதல் சொல்லமுடியாத அவனது ஆறுதல் என அவனின் அனைத்து வாழ்வியல் கூறுகளும் எதிர்காலத்தின் நம்பிக்கையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஊரடங்கிலும் வீடெங்கிலும் தனித்து விடப்பட்டவர்களின் குரல்கள் நசுங்கிப்போய் கூட்டு வாழ்வில் இணைய காத்துக் கிடக்கிறது. நோய் விலகி நொடிப்பொழுது கிடைத்தால் கூட எல்லோரும் ஒருவரை ஒருவர் கைகோக்கவும் கட்டித்தழுவவும் காத்துக் கிடக்கிறார்கள். காலம் ஒன்றே மருந்து. நாம் எதை அதிகம் தேடுகிறோமோ அதையே சில நேரங்களில் இந்த வாழ்வு பரிசாக அளிக்கும். இப்போது நாம் அனைவரும் தேடுவது கூட்டுவாழ்வின் வேர்களைத் தேடி மட்டுமே!