இ பாஸ் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த டயாலிசிஸ் நோயாளியின் சிகிச்சைக்காக ஆட்சியர் சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சிக் கிராமத்தைச் சேர்த்தவர் ராமதாஸின் மனைவி ராஜகுமாரி. இவர் டயாலிசிஸ் பிரச்னை காரணமாக கடந்த 5 மாதங்களாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக தஞ்சையில் மீண்டும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி வழியாக தஞ்சை செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இதனால் ராஜகுமாரி குடும்பத்தினர் அருகில் உள்ள இளைஞர்களின் உதவியோடு இ- பாஸ்க்கு விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. இருப்பினும் பாஸ் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ராஜகுமாரிக்குக் உடல்நிலை மோசமான நிலையில், இது குறித்த செய்தி புதிய தலைமுறையில் ஒளிபரப்பானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா அவர்களுக்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்து ராஜகுமாரியை சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்.
இதனையடுத்து தா.பழூர் வருவாய் ஆய்வாளர் பசுபதி மற்றும் வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் ஆகியோர் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி ராஜகுமாரியை சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பிவைத்தனர்.