பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைக்காக இருவரிடையே ஏற்பட்ட போட்டியை அமைச்சர் ஒருவர் டாஸ் போட்டு முடிவு செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் போட்டி தேர்வு மூலம் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒரு குறிப்பிட்ட பணியிடத்திற்கு இருவரிடையே போட்டி ஏற்பட்ட நிலையில், அமைச்சர் சரன்ஜித் சிங் டாஸ் போட்டு ஒருவரை தேர்வு செய்தார். இந்த வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகள் வெளியாகி வைரலாகியது. அதேபோல், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.
இந்த வீடியோ வெளியான நிலையில் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக, அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
தான் செய்ததை நியாயப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் சரன்ஜித் சிங், ‘நான் செய்ததில் தவறு ஏதுமில்லை. மெரிட் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. இதற்கு முன்பு பணி நியமனங்களில் பணத்திற்கு விற்கப்பட்டது. ஊழல் புரையோடி போய் இருந்தது. நான் அதனை முறியடித்துள்ளேன்’ என்றார்.