டிரெண்டிங்

அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?

அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?

webteam

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் 160 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் பஞ்சாப் தோற்றிருக்கிறது. அதிரடி சூரர்களாக வைத்துக் கொண்டு 160 ரன்களை கூட எடுக்க முடியாமல் பஞ்சாப் சொதப்பியது ஏன்?

தவான், பேர்ஸ்ட்டோ, பனுகா ராஜபக்சா, லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா இதை விட சிறந்த பேட்டிங் லைன் அப்பை இந்த சீசனில் வேறு எந்த அணியிலும் பார்க்கவே முடியாது. ஆனால், இது வெறுமென On paper இல் மட்டும்தான். பேப்பரில் பார்க்கும் போது இந்த லைன் அப் கொடுக்கும் மிரட்சி, களத்தில் வெளிப்படுவதே இல்லை. தங்களின் இயல்பான தகுதியை விட மிகக்குறைவான Below Par பெர்ஃபார்மென்ஸையே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். டெல்லிக்கு எதிராகவும் நேற்று அப்படித்தான் ஆடியிருந்தனர்.

டெல்லி அணியால் 20 ஓவர்களில் 159 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாபுக்கு டார்கெட் 160. எளிமையான டார்கெட்தான். ஆனால், பஞ்சாபால் இதை கூட சேஸ் செய்ய முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வென்றது. இந்த தோல்வி மூலம் பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

சேஸிங்கின் போது தொடக்கத்தில் பேர்ஸ்ட்டோ நன்றாக ஆடினார். அவர் அதிரடியாக 28 ரன்களை எடுத்து அவுட் ஆன போது அணியின் ஸ்கோர் 38. 38 ரன்களிலிருந்து 67 ரன்களை எட்டுவதற்குள் அதாவது கூடுதலாக 29 ரன்களை சேர்ப்பதற்குள் மேலும் 5 விக்கெட்டுகளை பஞ்சாப் இழந்திருந்தது. ராஜபக்சே, தவாண், மயங்க், லிவிங்ஸ்டன், ப்ரார் என அத்தனை முக்கிய பேட்ஸ்மேன்களும் காலி. இதெல்லாம் ஒரு 5 ஓவர்கள் இடைவெளியில் நடந்து முடிந்திருந்தது. இப்போது பஞ்சாப் அணியின் ஸ்கோர் 67-6. ஜித்தேஷ் சர்மா மட்டும் கொஞ்சம் நின்று போராடினார். ஆனால், அவராலும் அணியை வெல்ல வைக்க முடியவில்லை.

கொத்து கொத்தாக வரிசையாக விக்கெட்டை விடுதல் என்பதுதான் பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அது இந்த போட்டியில் மட்டுமில்லை. இந்த சீசன் முழுவதுமே அப்படித்தான். அதிரடியாக ஆட வேண்டும். ஒவ்வொரு பந்தையும் சிக்சராக்க வேண்டும் என்கிற அவர்களின் அணுகுமுறைதான் இங்கே பிரச்சனையாக இருக்கிறது. டி20 க்கு இதுதான் தேவை என்றாலும் அதிரடி என்பது கொஞ்சம் சமயோஜிதத்தோடு கூடியதாக இருக்க வேண்டும். லிவிங்ஸ்டன் பஞ்சாப் அணியின் மிக முக்கிய பேட்ஸ்மேன். அதிரடியாக மட்டுமே ஆடுவார். சூழலையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தவே மாட்டார். டெல்லிக்கு எதிராக தொடக்கத்தில் ஆடிய போட்டியில் அக்சர் படேலுக்கு எதிராக க்ரீஸை விட்டு இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயன்று ஸ்டம்பிங் ஆகியிருப்பார். இரண்டாவதாக நேற்று டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியிலும் குல்தீப் யாதவுக்கு எதிராக க்ரீஸை விட்டு இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயன்றே ஸ்டம்பிங் ஆகியிருப்பார். இரண்டு தருணங்களிலுமே அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து அணி சரிவிலிருந்த போதுதான் லிவிங்ஸ்டன் க்ரீஸை விட்டு இறங்கி வந்து அட்டாக் செய்ய முயன்று ஸ்டம்பிங் ஆகியிருப்பார்.

நேற்று 6 வது ஓவரில் ராஜபக்சேவும் தவானும் அவுட். 7 வது ஓவரில் மயங்க் அகர்வால் அவுட். அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள். இன்னும் ஒன்றிரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் தோல்வி உறுதி. ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பே கேள்விக்குறியாகிவிடும் என்பதெல்லாம் தெரிந்தும் லிவிங்ஸ்டன் நின்று ஆடாமல் அவசரகதியில் அவுட் ஆகிப்போனார். துணிச்சலுக்கும் யோசனையற்ற மூடத்தனத்துக்குமான வித்தியாசம் லிவிங்ஸ்டனுக்கு மட்டுமில்லை. ஒட்டுமொத்த பஞ்சாப் அணிக்குமே தெரியவில்லை. தறிகெட்டு போய் லிவிங்ஸ்டன் இறங்கி அவுட் ஆனதை போன்றுதான். பெரும்பாலான பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் இந்த சீசன் முழுவதும் அவுட் ஆகி வருகின்றனர். டி20 இல் அட்டாக்கிங்காக அக்ரசிவ்வாக ஆட விரும்பலாம். ஆனால், முழுமையாக அப்படி மட்டுமே ஆட முடியாது. சில சமயங்களில் டிஃபன்ஸ்விவ்வாகவும் ஆடத்தான் வேண்டும். பாய்வதற்கு முந்தைய பதுங்கல்களை பற்றியெல்லாம் பஞ்சாப் எங்கேயும் யோசிப்பதே இல்லை.

இப்படி கொத்து கொத்தாக விக்கெட்டுகள் விடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஓப்பனிங் இறங்கிக் கொண்டிருந்த கேப்டன் மயங்க் அகர்வால், மிடில் ஆர்டருக்கு தன்னை நகர்த்திக் கொண்டார். ஆனால், பிரச்சனை என்பது பேட்டிங் ஆர்டரில் மட்டும் இல்லை. பிரச்சனை வீரர்களின் அணுகுமுறையிலும் மனநிலையிலும் இருக்கிறது. அதை கேப்டன் மயங்க் அகர்வாலும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவும் உணர்ந்தார்களா என்பதே தெரியவில்லை.


சிக்சர் அடிப்பது மட்டுமே டி20 அல்ல. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் குஜராத் டைட்டன்ஸ். குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. ஆனால், இந்த சீசனில் அதிகமான சிக்சர்களை அடித்த அணிகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் குஜராத் கடைசி இடத்திலேயே இருக்கிறது. பஞ்சாப் டாப் 3 க்குள் வந்துவிடுகிறது. ஆனால், புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் எங்கே இருக்கிறது? இந்த முரணை உணர்ந்தாலே பஞ்சாப் சீரான வெற்றிகளை பெற முடியும். இந்த சீசனில் காலம் கடந்துவிட்டது. அடுத்த சீசனிலாவது உணரட்டும். அதெல்லாம் இருக்கட்டும். முதலில் அடுத்த சீசனுக்கு மயங்க் அகர்வால் கேப்டனாக இருப்பாரா? அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருப்பாரா? எல்லாம் ப்ரீத்தி ஜிந்தா கையில்தான் இருக்கிறது.

-உ.ஸ்ரீராம்