’பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க கூடாது’ என தான் தெரிவித்ததாக வெளியான தகவல் தவறாக சித்தரிக்கப்பட்ட செய்தி என பஞ்சாப் பாஜக தலைவர் அஷ்வனி ஷர்மா விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், பஞ்சாப் பாஜக தலைவர் அஷ்வனி ஷர்மா, "ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பது என்பது பயங்கரவாதத்திற்கு வாக்களிப்பது ஆகும், அது பஞ்சாபை உடைப்பதற்கான வாக்கு. ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கும் எவரும் நாட்டையும் பஞ்சாபையும் காட்டிக் கொடுப்பார்கள். நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்றால் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். நாட்டுக்கு துரோகம் செய்யும் ஒருவருக்கு வாக்களிக்காதீர்கள்" என்று கூறியிருந்தார்
அஸ்வனி சர்மாவின் இந்த கருத்துக்கள் மாநிலத்தில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் சூழலில், இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், "பொய்களைப் பரப்புவது காங்கிரஸின் பழைய தந்திரம். மாநில மக்களை முட்டாளாக்குவதற்காக என்னுடைய ஒரு அறிக்கை திரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸும் ஆம் ஆத்மியும் பஞ்சாபிற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது, இரண்டு கட்சிகளும் பஞ்சாபிற்கு ஆபத்தானவை. எனவே பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவும் , அதனால் மாநிலம் பாதுகாப்பாக வளர்ச்சியடையும்" என்று அவர் புதிய வீடியோவில் கூறியுள்ளார்