டிரெண்டிங்

திமுக கூட்டணியில் விரிசல் என்று யார் சொன்னது? - ஸ்டாலின் சந்திப்புக்கு பின் நாராயணசாமி பேட்டி

webteam

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக குறித்து தமிழக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிஏஏவுக்கு எதிராக டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், திமுக தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை.

அதற்கு அடுத்த நாள், கே.எஸ்.அழகிரி சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணியில் எந்த பிரிவும் இல்லை எனவும் இணைந்த கரங்களாக உள்ளோம் எனவும் அழகிரி தெரிவித்தார். இதையடுத்து திமுகவை சேர்ந்த துரைமுருகன், காங்கிரஸ் பிரிந்து சென்றாலும் கவலையில்லை என அதிரடியாக பேசினார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார். திமுகவை சமரசப்படுத்தும் முயற்சியாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று மதியம் 12 மணிக்கு ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்குமுன் நாராயணசாமி ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் என்று யார் சொன்னது? கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி வலுவாக இருக்கும். ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறினேன்” எனத் தெரிவித்தார்.