டிரெண்டிங்

படகில் பயணித்து பரப்புரை செய்த பிரியங்கா

படகில் பயணித்து பரப்புரை செய்த பிரியங்கா

webteam

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி படகில் சவாரி செய்தபடி நூதன முறையில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்காக நீர்நிலைகளின் வழியாகவும் பேருந்து, ரயில், பாதயாத்திரை வாயிலாகவும் பரப்புரை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தனது பரப்புரையை படகில் தொடங்கியுள்ளார். நீர்நிலை‌ வழியாகச் செல்ல பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட படகில் பிரியங்கா தனது பயணத்தை தொடங்கினார்.அப்போது இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைய, பிரயாக்ராஜில் உள்ள படுத்த நிலையில் இருக்கும் ஹனுமனை அவர் வழிபட்டார்.

மேலும் இந்தப் படகு பயணம் குறித்து கடிதம் ஒன்றைப் பிரியங்கா வெளியிட்டுள்ளார். அதில்“நதிக்கரையோரம் வசிக்கும் மக்களை நேரடியாக சந்திக்கவே இந்தப் படகு பயணம் காங்கிரஸ் தரப்பில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் பிரயாக்ராஜில் இருந்து மிர்சாபூர் மாவட்டம் வரை சுமார் 140 கிலோ மீட்டர்‌ தூரத்துக்கு படகு பயணம் நடைபெறுகிறது. பெண்கள் மத்தியில் ஆதரவு திரட்டவும் அவர்களுடன் இயல்பான சூழ்நிலையை ஏற்படுத்தவும் இந்த முயற்சி செய்துள்ளோம். ‌உண்மைக்கும் சமத்துவத்திற்கும் ‌அடையாளமாக மாறுபட்ட கலாசார மக்களை கங்கை நதி கொண்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் உயிர்நாடியாக விளங்கும் கங்கை நதி ‌மக்களை நேரடியாக சந்திக்க வைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனைத்தொடர்ந்து இந்தப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் தேர்தல் பொதுக்கூட்டத்துடன் பிரியங்கா நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.