டிரெண்டிங்

'வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டில் தீவிர மறுமதிப்பீடு தேவை!' - பிரியங்கா போர்க்கொடி

webteam

அசாமில் பாஜக வேட்பாளர் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் கொதிப்படைந்துள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து தீவிர மறுமதிப்பீடு தேவை என்று பிரியங்கா காந்தி போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரின் வாகனங்களிலிருந்து வாக்குப்பதிவு பெட்டிகளை பொதுமக்கள் மீட்ட விவகாரம், அம்மாநில மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. (வாசிக்க > பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குப்பதிவு பெட்டிகள்... அசாம் 'சம்பவம்' - நடந்தது என்ன?)  இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அனைத்து தேசிய கட்சிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (ஈ.வி.எம்) பயன்படுத்துவது குறித்து 'தீவிர மறு மதிப்பீடு' செய்ய வேண்டும் என்று கூறி இருகிக்கிறார். அசாம் சம்பவத்தை தொடர்ந்து இந்த கருத்தை பிரியங்கா கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும்போது, ஈ.வி.எம்-களைக் கொண்டு செல்லும் தனியார் வாகனங்களின் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆச்சரியப்படத்தக்க வகையில் அவர்களுக்கு பின்வரும் விஷயங்கள் பொதுவானவை:

1. வாகனங்கள் பொதுவாக பாஜக வேட்பாளர்கள் அல்லது அவர்களது கூட்டாளிகளுக்கு சொந்தமானவை.

2. வீடியோக்கள் ஒருமுறை எடுத்த பின்னர், அது தவறு அல்லது பிறழ்வுகள் எனக் கூறி வீடியோக்கள் நீக்கப்படுகின்றன.

3. வீடியோக்களை அம்பலப்படுத்தியவர்கள் தோல்விக்கு பயந்தவர்கள் என்று குற்றம்சாட்ட ஊடக இயந்திரங்களை பாஜக பயன்படுத்துகிறது.

உண்மை என்னவென்றால், இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகின்றன. அவை குறித்து எதுவும் செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையம் இந்தப் புகார்களில் தீர்க்கமாக செயல்படத் தொடங்க வேண்டும். மேலும், ஈ.வி.எம்-களின் பயன்பாட்டை தீவிரமாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்பது அனைத்து தேசிய கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஆகஸ்ட் 2018-இல், தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்பக் கோரியிருந்தன. இந்த நிலையில், பிரியங்கா வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பின் ஈ.வி.எம்-களின் பயன்பாடு குறித்து மீண்டும் விவாதங்கள் தொடங்கியுள்ளன.