டிரெண்டிங்

“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி

webteam

தேசிய பாதுகாப்பு குறித்து எதிர்கட்சிகளிடம் எந்தத் திட்டமும் இல்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் அதிமுக, பாஜக கூட்டணி பரப்புரை நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அக்கூட்டத்தில், வணக்கம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். மேலும் மருதமலை முருகனுக்கு அரோகரா என பிரதமர் உரையை ஆரம்பித்தார்.

அப்போது பேசிய அவர், “உலக அளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது . அதிகாரத்தை கைப்பறற எதிர்கட்சிகள் துடித்து கொண்டிருக்கின்றன. கல்வி வளமும் தொழில் வளமும் மிகுந்த கோவை நகரத்தில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டின் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் இருக்கிறோம். தேசிய பாதுகாப்பு குறித்து எதிர்கட்சிகளிடம் எந்தத் திட்டமும் இல்லை. 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்க போகிறது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் இது.

பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. எம்.ஜி.ஆர் ஜெயலலிதா எண்ணங்கள் நம்மை வழிநடத்தும் என எண்ணுகிறேன். நிலையான ஆட்சி அமைய வேண்டும் எனத் தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. பாதுகாப்பு தளவாட மையங்கள் தமிழகத்தில் அமையும்போது வேலைவாய்ப்பு முதலீடு அதிகரிக்கும்.

தேசியம் பற்றி மோடி ஏன் பேசுகிறார் என்று எதிர்கட்சிகள் கேட்கின்றனர். தேசியம் பற்றி பேசுவது குற்றமா? நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பி பதிலடி கொடுக்கப்படும். தேசியவாதிகளாகவே இருந்தோம். தேசியவாதிகளாகவே இருக்கிறோம். தேசியவாதிகளாகவே இருப்போம். எதிரி நாடு மீது எதிர்க்கட்சி மென்மையாக நடந்து கொள்கிறது.

தேசியத்தன்மைதான் அனைவரும் வங்கி கணக்கு. எதிர்க்கட்சிகள் எண்ணங்கள் நாட்டை பாதுகாக்க உதவாது. காங்கிரஸ் அறிக்கையில் நடுத்தர மக்களை பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடவில்லை. நடுத்தர மக்களை வஞ்சிப்பது காங்கிரசுக்கு ஒன்றும் புதிதல்ல. ” எனப் பேசினார்.