டிரெண்டிங்

தேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு

rajakannan

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை கோயம்பேடில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பரப்புரைகள், பொதுக்கூட்டங்களில் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை வகித்தாலும், அவருக்கு எந்தப் பொறுப்புகளும் வழங்கப்படாமல் இருந்தது.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்குழுவில் தேமுதிக நிறுவன தலைவரான விஜயகாந்த் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில், பிரேமலதா பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேமுதிகவின் அவைத்தலைவராக டாக்டர்.வி.இளங்கோவன், கழக கொள்கைப்பரப்பு செயலாளராக அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் உயர்மட்ட குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 

“எதிர்பாராத வகையில், பொருளாளராக என்னை விஜயகாந்த் அறிவித்துவிட்டார். தீபாவளி போனஸ்போல் எனக்கு பொருளாளர் பதவி கொடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறினர்” என்றார் பிரேமலதா விஜயகாந்த். மேலும், “குடும்பத்தில் இருந்து கட்சிப் பொறுப்புக்கு யாரும் வரமாட்டார்கள் என விஜயகாந்த் கூறவில்லை. 14 ஆண்டுகால உழைப்பிற்கு பின்னர் தேமுதிக பொருளாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதற்கிடையே, தேமுதிக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரேமலதாவிற்கு, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.