டிரெண்டிங்

“எங்களுக்கு ஒரே வருமானம் கல்யாண மண்டபம்தான்” - பிரேமலதா வருத்தம்

webteam

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரி ஏலத்திற்கு வருவதாக ‌இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் பிரச்னையை சட்ட ரீதியாக சந்தித்து மீண்டு வருவோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சாலிகிராமம், சென்னை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரி வரும் ஜூலை 26ஆம் தேதி ஏலத்துக்கு வருவதாக இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அறிவித்துள்ளது. தங்கள் வங்கியில் பெற்ற 5 கோடியே 52 லட்சம் ரூபாய் கடன் பாக்கிக்காக விஜயகாந்துக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்த வங்கி தெரிவித்துள்ளது. 

கடன் நிலுவை , வட்டி உள்ளிட்டவற்றை வசூலிக்க இந்த ஏல நடவடிக்கையை எடுப்பதாக அவ்வங்கி கூறியுள்ளது. இதன் படி சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்துக்கு சொந்தமான வீடு மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி ஆகியவை ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலம் தொடர்பான விளம்பரங்கள் இன்றைய நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி குறைந்தபட்ச கேட்பு தொகையாக 92 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏல விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்ட ரீதியாக இப்பிரச்னையை எதிர்கொண்டு மீண்டு வருவோம் எனக் கூறினார். 

மேலும், “இன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான கல்லூரிகளின் நிலை இதுதான். பொறியாளர் கல்லூரி எல்லாமே இன்று கடனில்தான் சென்று கொண்டிருக்கிறது. எங்கள் கல்லூரி ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. சேவை நோக்கில் தான் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அதனை நடத்துவதில் சிரமங்கள் இருந்தாலும் கல்லூரி தொடந்து செயல்படும். கல்லூரியை மேம்படுத்தவே கடன் வாங்கப்பட்டது. அதில் இன்னும் 5 கோடி கடன் உள்ளது. 

அதை திருப்பி செலுத்த 2 மாதம் காலத்தவணை கேட்டோம். ஆனால் வங்கி தரமறுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை சட்ட ரீதியாக கையில் எடுத்து தீர்வு காண்போம். தமிழகத்தில் உள்ள எல்லா கல்லூரிகளின் நிலைமையும் இதுதான். எங்கள் விஷயம் என்பதால் இது பெரிதாக வெளியே வருகிறது. இது ஒன்றுமே கிடையாது. ஒரு 5 சி மேட்டர்தான். 

நேர்மையாக, தர்மமாக நடப்பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வரும். ஆனால் இந்தச் சோதனையில் நிச்சயம் வெல்வோம். விஜயகாந்தின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அப்போது சினிமாவில் நடித்து கொண்டிருந்தார். இப்போது சினிமாவில் நடிப்பதில்லை. எங்களுக்கு இருந்த ஒரே வருமானம். கல்யாண மண்டபம். அதுவும் இடிக்கப்பட்டது. எங்களது மகன்களில் ஒருவர் இப்போதுதான் நடிக்க ஆரம்பிக்கிறார். இன்னொருவர் இப்போதுதான் பிசினஸ் தொடங்கியுள்ளார். வேறு எந்த வகையிலும் எங்களுக்கு வருமானம் இல்லை. ஆனால் நாங்கள் கஷ்டப்பட்டாவது இந்தக் கடனை அடைத்து கல்லூரியை மீட்டெடுப்போம்.
 
அதுமட்டுமில்லாமல் சம்பளம் கொடுப்பது கூட இப்போது பெரிய சவாலான விஷயம்தான். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. சினிமாதுறை எப்படி நலிவடைந்துகொண்டிருக்கிறதோ, அதேநிலைதான் கல்லூரிகளுக்கும். படம் ரிலீஸான முதல் நாளே மாபெரும் வெற்றி என்று கூறுவார்கள். ஆனால் எல்லா படங்களும் ஃபிளாப்தான். நாங்கள் கடன் வாங்குவதை விடுங்கள். தமிழ்நாடே கடனில்தான் இருக்கிறது. இந்தியாவும் கடனில் தான் இருக்கிறது. 

நகைக்கடைகள், ஓட்டல்கள், கல்லூரி என எந்த நிறுவனங்களாக இருந்தாலும் கடன் வாங்கிதான் அதை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். எனவே ஜூலை 26 வரை நேரம் இருக்கிறது. அதற்குள் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவோம். கல்லூரி வருமானத்தை வைத்து அதை நிர்வாகம் செய்யமுடியாத நிலைமை பல ஆண்டுகளாக உள்ளது. இருந்தாலும் எங்களின் சொந்த பணத்தை போட்டு கல்லூரியை நடத்தி வருகிறோம். உறுதியாக எங்கள் கல்வி சேவை தொடரும். விஜயகாந்த் நலமுடன் உள்ளார். கூட்டணி நிச்சயம் தொடரும்.” எனத் தெரிவித்தார்.