prakesh raj
prakesh raj PT
டிரெண்டிங்

“உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்னை! Grow Up” - ட்ரோல்களுக்கு பிரகாஷ்ராஜ் பதில்!

Jayashree A

சந்திரயான் 3 ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளது. வெற்றிகரமாக அது தரையிரங்கினால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாயின் நினைவாகவே சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டருக்கு விக்ரம் லேண்டர் எனப் பெயரிடப்பட்டது.

இதனால் உலகமே சந்திராயன் 3 வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இப்படியான சூழலில்தான் நேற்று முன்தினம் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நிலாவில் ஒருவர் டீ போடுவதாக கேலிச்சித்திரம் ஒன்றை ட்விட் செய்தார். அதன் கேப்ஷனாக அவர் ‘முக்கியச் செய்தி: வாவ்... விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் இருந்து வரும் முதல் படம்’ என பதிவிட்டுள்ளார். இதுதான் நெட்டிசன்களிடையே கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

பிரகாஷ்ராஜின் ட்வீட்டின் கீழே நெட்டிசன் ஒருவர், “நீங்கள் தனிப்பட்ட விதத்தில் வேறொரு அரசியலை சார்ந்தவராக இருக்கலாம். அதற்காக அறிவியல் விஞ்ஞானிகளை வெறுப்பது, அவர்களின் பணியை கேலி செய்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.

மற்றொருவர் “நமது விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாயின் பெயரிடப்பட்ட விக்ரம் லேண்டர் கொண்டு நம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 ன் பின்னுள்ள கடின உழைப்பைக் கேலி செய்யும் அளவுக்கு மோடி மீதான வெறுப்பில் நீங்கள் கண்மூடித்தனமாக இருக்கிறீர்களா?” என்றுள்ளார்.

இன்னும் அவர் மீது மிகக்கடுமையான பல விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரகாஷ்ராஜ் மற்றொரு பதிவை போட்டிருக்கிறார். அதில் அவர் “வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கிறது. நான் என் பதிவின் மூலம் ஆம்ஸ்ட்ராங் காலத்தின் நகைச்சுவையை குறிப்பிடுகிறேன்.

prakesh raj

அதன்படி என் பதிவில் நான் நமது கேரளா சாய்வாலாவை (தேநீர் கடைக்காரர்களை) கொண்டாடுகிறேன். உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்னை. வளருங்கள்” என்றுள்ளார்.

'உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும், அங்கு ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார்' என்னும் காமெடியை நினைவுபடுத்தும் விதமாகத்தான் விக்ரம் லேண்டர் அனுப்பும் புகைப்படத்தில் மலையாளி டீக்கடைக்கார் இருப்பதாக வெளியிட்டிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.