டிரெண்டிங்

“நிஜ வாழ்க்கையில் நானே ஒரு ஆம் ஆத்மி” - டெல்லி பிரச்சார களத்தில் பிரகாஷ் ராஜ்

“நிஜ வாழ்க்கையில் நானே ஒரு ஆம் ஆத்மி” - டெல்லி பிரச்சார களத்தில் பிரகாஷ் ராஜ்

webteam

 நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய குடியரசை மீட்க வேண்டும் என நடிகரும் மத்திய பெங்களூரு தொகுதி சுயேச்சை வேட்பாளருமான பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவின் மத்திய பெங்களூரு தொகுதியில் திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார். இதனையடுத்து அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். பெங்களூருவில் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து அவர் தற்போது டெல்லியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். அவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளார். 

இதுகுறித்து பிரகாஷ் ராஜ், ஆம் ஆத்மி தலைமயகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “ நான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளேன். நிஜ வாழ்க்கையில் நானே ஒரு ஆம் ஆத்மி.  
அதேபோல ஆம் ஆத்மி கட்சி நாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று தேர்தலில் நிற்கிறது.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சுகாதாரம், கல்வி ஆகியவற்றை முன் நிறுத்தி போட்டியிடுகிறது. அதுதான் மக்களுக்கு முக்கியமான தேவை. தற்போது நமது நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழலை மாற்றுவதற்கு பல தரப்பு மக்களும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் குடியரசை மீட்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை வட கிழக்கு டெல்லியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். அத்துடன் நாளை அவர் நியூ டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி தொகுதிகளில் வாக்கு சேகரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.