டிரெண்டிங்

"தபால் ஓட்டுகளில் முறைகேடு"- மணப்பாறை அதிமுக வேட்பாளர் குடும்பத்துடன் சாலைமறியல்

kaleelrahman

தபால் ஓட்டுகளை முறையாக விநியோகம் செய்யவில்லை என அதிமுக வேட்பாளர் குடும்பத்துடன் கதறி அழுதவாறு சாலை மறியலில் ஈடுபட்டார்.

மணப்பாறை நகராட்சி 17-வது வார்டு அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் மல்லிகா ராமமூர்த்தி. இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை நடைபெற்று வந்த நிலையில், தியாகேசர் ஆலை கிளை அஞ்சலகத்தின் மூலம் கடந்த வியாழக்கிழமை அவரது வார்டுக்கு 10 தபால் ஓட்டுகள் வந்துள்ளது. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் திமுக வேட்பாளரிடமே ஒப்படைக்கப்பட்டதாக மல்லிகா ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத்தொடர்ந்து குடும்பத்தினருடன் அஞ்சலகம் சென்ற மல்லிகா ராமமூர்த்தி, கதறி அழுதவாறு மணப்பாறை - விராலிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சூர்யா தலைமையிலான போலீசார், முறையாக புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சமரசம் செய்தார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை மறியல் காரணமாக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.