அதிமுகவின் இரு அணிகளும் மனமார, உளமார இணைந்தே செயல்படுவதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று எம்.பி.யும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அது மைத்ரேயனின் தனிப்பட்ட கருத்துதான் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த மைத்ரேயன், மனங்கள் இணையவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. தொண்டர்களின் உணர்வைத்தான் எதிரொலித்துள்ளேன் என மறுபடியும் தனது ஃபேஸ்புக்கில் அதிரடியாக பதிவிட்டார்.
இந்நிலையில் இரு அணிகளின் மனங்களும் இணைந்தே செயல்படுவதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், “இரு அணிகளின் மனங்களும் இணைந்தே செயல்படுகிறது. மனமார, உளமார உணர்வுப்பூர்வமாக இரு அணிகளின் மனங்களும் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆசியில் இணைந்தே செயல்படுகின்றன” என்றார்.