டிரெண்டிங்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - காங்கிரஸ் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - காங்கிரஸ் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

webteam

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டிலுள்ள பெண்கள் மட்டுமல்ல, அந்த கட்சியிலுள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என கன்னியாகுமரி ம‌க்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 

கர்நாடகாவில் ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக‌ நடிகை குஷ்பு நேற்று முன் தினம் ஹொய்சாலா நகருக்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் அவரைக் காண முட்டிமோதினர். 

இதனால் கூட்ட நெரிசலில் சிக்கியபடி குஷ்பு மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது பின்னால் வந்த நபரின் கன்னத்தில் குஷ்பு பளார் என அறைந்தார். இதனால், அங்கிருந்தவர்கள் என்ன நடந்தது என அறியாமல் திகைத்தனர். தவறாக நடக்க முயற்சித்ததால், ஆத்திரமடைந்த குஷ்பு அவரை அறைந்தது பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில், நாகர்கோவிலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் நாட்டிலுள்ள பெண்கள் மட்டுமல்ல, அந்த கட்சியிலுள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என விமர்சித்தார். 

மேலும் தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் என ராகுல்காந்தி கூறுகிறார் எனவும் தமிழகத்தை தற்போது ஆள்வது யார்? எனவும் கேள்வி எழுப்பினார். பச்சைத் தமிழர்கள்தான் தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.