டிரெண்டிங்

’’தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டுவர நல்லமுயற்சி நடக்கிறது”- பொன். ராதாகிருஷ்ணன்

’’தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டுவர நல்லமுயற்சி நடக்கிறது”- பொன். ராதாகிருஷ்ணன்

Sinekadhara

 
கோவில்பட்டியில் தமிழக பாஜக மூத்த நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் பாஜக வளர்வதைக் கண்டு திமுகவிற்கு அடிவயிறு பற்றி எரிகிறது. திமுகவைப் பொருத்தவரை சர்வமும் ஒரு ஜான்தான். வேளாண் சட்டத்தினை எதிர்த்து திமுகவினர் நடத்திய போராட்டம் தோல்வி அடைந்துள்ளது.

15 கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் 100 பேர் கூட வரவில்லை. மக்கள் இன்றைக்கு எல்லா விஷயங்களையும் புரிந்து கொண்டனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும். வறுமையில் வாடும் விவசாயிகளின் நிலையை வளம் பொருந்தியதாக மாற்ற வேண்டும். அதற்கு என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவந்தால் சரியாக இருக்குமோ, அதற்காக அறிஞர் குழுவை நியமித்து, அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு இது.

இதனை விவசாயிகளும் வரவேற்கின்றனர். விவசாயிகளை வைத்து யாரெல்லாம் அரசியல் நடத்த விரும்புகிறார்களோ அவர்கள் சட்டத்தை எதிர்க்கின்றனர். டெல்லியில் தமிழக விவசாயிகளை நிர்வாணமாக ஓடச்செய்து கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தியது திமுக. தமிழர்கள் என்றோ, விவசாயிகள் என்றோ பார்க்காமல் அரசியல் ஆதாயத்திற்காக யாரை வேண்டுமானாலும் நிர்வாணப்படுத்தி ஓட விடுவார்கள்.

நான் அவர்களிடம் இது போன்று செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். விவசாயிகளை கொச்சைப்படுத்தக்கூடியது திமுக கூட்டணி. அவர்கள் கூறுவதை பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. விவசாயிகளுக்கு புதிய வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வேளாண் சட்டம் குறித்து விவசாயிகளுக்கு முழு விவரங்கள் தெரிய வரும்போது விவசாயிகளும் இதை முழுமையாக வரவேற்பார்கள் என்றார்.

பாரதிய ஜனதா கட்சியில் தேசிய அளவிலான பொறுப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு, "பாரதிய ஜனதா கட்சியினர் நாங்கள் யாரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழகத்தில் பாஜக கட்சியை ஆளும் கட்சியாக கொண்டுவரக்கூடிய பணி எங்கள் பணி. அதற்காக நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அது நிச்சயமாக நல்ல முறையில் நடக்கும் என்றார்.

அதிமுக செயற்குழுவில் நடந்தவைகள் பற்றி கேட்டபோது, அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது அது அவர்களுடைய பிரச்னை, அவர்கள் முடிவு செய்வார்கள், அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்றார்