டிரெண்டிங்

“மத்திய அரசின் திட்டத்தால் அதிகம் பயன்பெற்றது தமிழகம்தான்” - பொன்.ராதா

webteam

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இதனால் அதிகம் பயன்பெற்றது தமிழ்நாடுதான் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மோடி ஆட்சி மீண்டும் இந்தியாவில் ஏற்பட எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. ஆடிட்டர் குருமூர்த்தி மிகச்சிறந்த சிந்தனையாளர் என அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவின் ஆளுமையை தற்போது உள்ள முதலமைச்சரோடு ஒப்பிட முடியாது. அவர் பெரிய ஆலமரம், அதிலிருந்த பறவைகள்தான் தற்போது உள்ளவர்கள். மேலும் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக யாரிடமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசவில்லை. தேர்தலில் நாட்டுக்கு எது நல்லதோ அதன்படி உரிய முடிவெடுப்போம் என்றார். 

ஊழலுக்கு எதிரான கட்சி பா.ஜ.க, எங்களோடு யார் சேர்ந்தாலும் அது ஊழல் இல்லாமல்தான் இருக்கும். பாராளுமன்றத் தேர்தலில் எங்களுடன் யார் கூட்டணி சேர வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவெடுபோம் என்றும் எங்களுக்கு மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க வழக்கு தொடர்ந்தது அவர்களின் குரூரமான புத்தி. அந்தக் கட்சி ஏழைகளுக்கு எதிரான கட்சி என்பது இதிலிருந்து தெரிகிறது. கோடநாடு விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பின்னால் உள்ளது யார் என்பதை உரிய விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும். பிரதமர் மோடி தமிழக மீனவர்களுக்கு செய்தது போல வேறு யாரும் செய்தது இல்லை. தமிழக மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.