தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக 2,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முதற்கட்டமாக இன்று 650 பேருந்துகளும், நாளை 1500 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. வியாழக்கிழமை தேர்தல் வாக்குப்பதிவு நாள், வெள்ளிக்கிழமை புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக இந்த சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நாளான 18-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சித்திரைத்திருவிழா நடைபெறும் மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவை கண்காணிக்க, தலைமைச்செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வாக்குப்பதிவு மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.