டிரெண்டிங்

பொள்ளாச்சி ஜெயராமன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - கே.சி.பழனிசாமி

rajakannan

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதைத்தொடர்ந்து சிபிஐ விசாரணை மாற்ற தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.பழனிசாமி, “பொள்ளாச்சி ஜெயராமனை ராஜினாமா செய்ய முதல்வர் பழனிசாமி வலியுறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், “பொள்ளாச்சி சம்பவம் என்பது எல்லோரையும் மனதையும் கலங்கடிக்கும் சம்பவம். முதல்வர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டாலும் அதை மக்கள் ஏற்கவில்லை. வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உத்தரவில் பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இதை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது விசாரணை தொடங்குவதில் காலதாமதம் ஏற்படும். உயர்நீதிமன்ற விசாரணை குழு அமைத்து விசாரணை கண்காணிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும். ஏற்கனவே இது போன்ற ஒரு வழக்கில் சைலேந்திரபாபு எடுத்த நடவடிக்கைகள் சரியானது. அதே போல் இதுவும் விசாரணை நடக்க வேண்டும். 

அ.தி.மு.க. பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள கட்சி. ஜெயலலிதா இருந்தால் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதே போன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி ஜெயராமன் மிகவும் நல்லவர், பண்பானவர். ஆனால் தேர்தல் நேரத்தில் இப்படி நடக்க கூடாது. 

பொள்ளாச்சி ஜெயராமன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முதல்வர் சொல்ல வேண்டும். அ.தி.மு.க.வுக்கு கெட்டப்பெயர் ஏற்பட கூடாது எனில் இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் தன்னுடைய பதவியையும், கட்சி பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தனர். ஆனால் சிபிஐ அதை விசாரிக்க மறுத்தது. அதே போல் இதிலும் நடைபெறலாம். இந்த விவகாரத்தை சி.பி.ஐ.க்கு மாற்றினால் பா.ஜ.க.வுக்கு தேசிய அளவில் பாதிப்பு ஏற்படும். இன்று நடைபெறுவது அதிமுக அரசு. அதனால் இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி மீண்டும் கட்சியில் இணைய உள்ளார் என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவர் இத்தகைய கருத்தினை தெரிவித்துள்ளார்.