இன்று மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் தேர்தல் பற்றி மீடியாவிடம் பேசக் கூடாது என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. தமிழகத்திலும் அன்றுதான் தேர்தல் நடக்கிறது. மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டன. இறுதிக்கட்ட பிரசாரத் தில் இப்போது ஈடுபட்டுள்ளனர். பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
அதன்பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பற்றி பேசக் கூடாது என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். இன்று 6 மணிக்கு மேல் ஊடகங்களைச் சந்திக்கும்போது, பேட்டியில் தேர்தல் பற்றி எதுவும் கூறக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.