திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். உதயநிதி உதயமான கதை குறித்து பார்க்கலாம்.
1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்த உதயநிதி சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்தார். அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் உதயநிதிக்கு முதலில் அடையாளம் கொடுத்தது சினிமாதான். ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய உதயநிதி 2008ஆம் ஆண்டு விஜய் நடித்த குருவி படம் மூலம் தயாரிப்பாளரானார்.
தொடர்ந்து படத் தயாரிப்பிலும் விநியோகத்திலும் கவனம் செலுத்தி வந்த உதயநிதி, 2009ஆம் ஆண்டு வெளியான ஆதவன் படத்தில் லேசாக தலைகாட்டினார். அதைத் தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
நடிப்பு, தயாரிப்பு ஆகியவற்றுடன் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் மேலாண் இயக்குநர் பொறுப்பையும் கவனித்து வருகிறார் உதயநிதி. நடிகராக அறியப்பட்டிருந்த உதயநிதிக்கு அரசியல் அடையாளம் கொடுத்தது முரசொலி பத்திரிகையின் பவள விழா மேடைதான். கருணாநிதியின் மறைவுக்குப்பின் மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழைந்தார் உதயநிதி.
திமுக நடத்திய போராட்டங்கள் மற்றும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் தலை காட்டினார். அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சுற்றிவந்து வாக்கு சேகரித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களிலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது. அதற்கு உதயநிதி ஸ்டாலினின் பரப்புரையும் ஒரு காரணம் என்ற குரல் திமுகவிற்குள் கேட்கத் தொடங்கியது. அவருக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
திமுக இளைஞரணிச் செயலாளர் பதவி மிகுந்த செல்வாக்கும் அதிகாரமும் கொண்டது. அந்தப் பதவியில் இருந்த ஸ்டாலின் திமுக பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என அடுத்தடுத்த இடங்களுக்கு உயர்ந்ததே அதற்கு சான்று. அத்தகைய பதவியை உதயநிதிக்கு கொடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் சிலர் ஸ்டாலினிடமே நேரடியாக கோரிக்கை வைத்தார்கள். அப்படி ஒரு சூழலில்தான் தனக்கு திமுக தொண்டன் என்ற பொறுப்பே போதும் என்று உதயநிதி தெரிவித்தார். இந்நிலையில் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதியை அக்கட்சியின் தலைமை நியமனம் செய்துள்ளது.