டிரெண்டிங்

மதுபானக் கடையில் ரகளையில் ஈடுபட்ட காவலர்... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

மதுபானக் கடையில் ரகளையில் ஈடுபட்ட காவலர்... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

kaleelrahman

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடல் மதுபானக் கடையில் பூந்தமல்லி போக்குவரத்து தலைமை காவலர் மது பாட்டிலை தூக்கி வீசி ரகளையில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வேடல் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு தலைமை காவலர் முருகனும் அவரது உறவினரும் மது வாங்க சென்றிருக்கிறார்கள். அப்போது மது விற்பனையாளருக்கும் தலைமை காவலர் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த காவலர் முருகன் தகாத வார்த்தையில் கடையின் விற்பனையாளரை வசைபாடி கையில் வைத்திருந்த மது பாட்டிலை கடைக்குள் எறிய முயற்சி செய்துள்ளார். இதை கடை விற்பனையாளர் தனது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

இது குறித்து தலைமை காவலர் முருகனிடம் கேட்டபோது அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்ததால் அதற்கு உண்டான விளக்கம் கேட்டபோது சம்பந்தமில்லாமல் வெளிநபர் தன்னிடம் பிரச்னை செய்ததாகவும், அதனால் ஆத்திரத்தில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கடைக்காரரிடம் எந்தவிதமான பிரச்னையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அரசு மதுபான கடை விற்பனையாளர் கூறியபோது சம்பந்தப்பட்ட காவலர் மீது டாஸ்மாக் மேலாளரிடம் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.