டிரெண்டிங்

மதுபோதையில் எஸ்.ஐ-யை தாக்கிய காவலர் பணியிடைநீக்கம்..!

webteam

புதுக்கோட்டையில் உதவி ஆய்வாளரை மதுபோதையில் தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவருடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்குச் சென்றார். அங்குச் சென்ற ஜாகிர் உசேன் மனைவியைக் கட்டையால் தாக்கியதுடன், தடுக்க வந்த மாமனார் அப்பாஸையும் அரிவாளால் வெட்டினார்..

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார், காவலர் ஜாகிர் உசேனைத் தேடி வந்தனர். இதற்கிடையே சொந்த ஊரான முத்துபட்டினத்துக்கு சென்ற ஜாகிர் உசேன் மதுபோதையில் தாய் மற்றும் உறவினரோடு ரகளையில் ஈடுபட்டார். அவ்வழியே வந்த வல்லத்திரக்கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், ஜாகிரை தட்டிக்கேட்டார்.

மதுபோதையிலிருந்த ஜாகிர், பாலசுப்பிரமணியன் கன்னத்தில் அறைந்தார். அத்துடன் அவரது செல்போனையும் பறித்து சாலையில் வீசி உடைத்ததுடன், கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து தப்பி ஓடிய ஜாகீரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மதுபோதையில் எஸ்.ஐ பாலசுப்ரமணியனைத் தாக்கிய முதல் நிலை காவலர் ஜாகிர் உசேனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் உத்தரவிட்டுள்ளார்.

நெகிழித் தடையை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை? - பசுமை தீர்ப்பாயம் கேள்வி